Thursday, May 13, 2010
எம் தலைவன் கிழக்கு திசை
நிகழ்த்தப்பட்ட மாந்த பேரவலத்தை நினைத்துப் பார்க்கும் நாளுக்கு வந்திருக்கிறோம். ஹிரோஷிமா-நாகசாக்கி வீசப்பட்ட அணுகுண்டின் வெளிச்சம் அகிலத்தையே ஆட்டிப் படைத்தது. இரண்டாம் உலகப்போரின் வெற்றியை அமெரிக்கா தக்கவைத்துக் கொள்ள ஜப்பானின் நகரங்களின்மீது வீசிய அணுகுண்டு குறித்த தகவல்கள் அந்த மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பாதிப்பை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னர்தான் அந்த பாதிப்பில் கிடைத்த அவலங்களை பார்த்த பின்னர் தான் அடடா என்று கதறினார்கள். அவர்களின் அழுகுரலை பதிவு செய்ய ஊடகங்கள் அருகில் இருந்தது. நிகழ்த்தப்பட்டது மாந்த நாகரீகத்தின் சிதைவு. இது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் என மாந்த நேயத்தின் அக்கறை கொண்டவர்கள் எல்லாம் எதிர்த்து நின்று குரல் கொடுத்தார்கள்.
ஆனால் கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவுக்கும், முல்லைத் தீவிலிருந்து முள்ளி வாய்க்காலுக்கும் கடத்திச் செல்லப்பட்டு, பொய்யாக இது பாதுகாப்பு வலையம் என அறிவித்து, ஒட்டு மொத்த மக்களை ஒரே இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தப்பின்னர், அந்த மக்கள் மீது வான்வழியாகவும், தரைவழியாகவும் நடத்திய தாக்குதல் இதுவரை நடைபெற்ற யுத்தங்களின் நியாயங்களை மீறிய படுபாதகமாக இருந்தது. யாராலும் தட்டிக் கேட்க முடியாத, எடுத்துச் சொல்ல முடியாத, மாந்த பேரவலம் நிகழ்ந்து முடிந்தது. இது மாந்த நேயத்தை மட்டுமல்ல, ஒரு இனத்தையே அழிக்க படுபாதக செயல் என்பதை எடுத்துரைப்பதற்கு அங்கே ஏடுகள் இல்லை, அதை எழுதுவதற்கு ஊடகவியலர் இல்லை. அந்த இடத்தைக் கொண்டுபோய் காட்டுவதற்கு சிங்கள பேரினவாத அரசு தயாராக இல்லை. ஆனால் ஜப்பானிய நாகசாக்கி-ஹிரோஷிம்மா மக்களுக்கு தெரியாமலேயே அவர்கள் செத்துப் போனார்கள். ஆனால் எம் சொந்த மக்களுக்கு நிகழ்த்தப்பட்டது, அவர்கள் செத்துப் போவோம் என்று தெரிந்தே பாதுகாப்பு வலையத்திற்கு சென்றார்கள்.
அங்கே அவர்கள் முதியோர், பெண்கள், குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் இரத்த சகதியில் மூழ்கடிக்கப்பட்டார்கள். கேட்பதற்கு நாதியற்ற மக்களாய் அவர்கள் அங்கே கதறி துடித்தார்கள். காப்பதற்கான ஒரு கரம் வேண்டும் என்று அவர்கள் இந்த இந்திய நாட்டை நம்பி உதவி கேட்ட போது, அவர்கள் உதவி செய்ய மறுத்தாலும் பரவாயில்லை, உதவி கேட்டவர்களை கொன்றொழித்தார்கள். கிராமங்களில் சொல்வார்களே, இரவிலே உறங்க இடம் கொடுத்து, சோறு போட்டு, எதிரியிடம் காட்டிக் கொடுத்த கொடுமை போல, நான் காப்பாற்றுகிறேன், நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டே எமது மக்களை கடந்த ஆண்டு இதே மே திங்களில் 10ஆம் தேதி முதல் தொடங்கிய கடும் தாக்குதல், எமது தேசிய ராணுவம் தாங்கள் கருவிகளை மவுனிக்கச் செய்கிறோம் என்று கூறியப் பின்னரும் கடும் தாக்குதல் நடத்தி 15, 16, 17, 18 தேதிகளில் ஒரு மிகப்பெரிய இன அழிப்பை நடத்தி முடித்தார்கள்.
உலக போர் முறைகளுக்கெல்லாம் எதிராக, உலக போர் சட்டங்களை தூக்கி காலில் போட்டு மிதித்த பெரும் கொடுமையை சிங்கள-பாசிச ராசபக்சே அரசு செய்து முடித்தது. அவர்களின் கரம் கோர்த்து களத்திலே இருந்து மகிழ்ந்தது பார்ப்பனிய பாசிச இந்திய அரசு. போர் நிறைவெய்தும்வரை ராசபக்சே குடும்பத்தின் செல்ல நாய்க்குட்டியாக திரிந்த சரத்பொன்சேக, போர் நிறைவு பெற்று அவரை சிறையில் போட்டப் பின்னால் ராசபக்சேவின் நரி தந்திரத்தை உரித்து வைக்கத் தொடங்கினார். போர் நெறிமுறைகளுக்கு மாறாக, வெள்ளைக் கொடி ஏந்தி சமாதானத்திற்காக வந்த எமது போராளிகளை கொன்று போட யார் கட்டளையிட்டது? என்ற கேள்விக்கு சரத் அளித்த பதில் நம்மை திடுக்கிட வைத்தது. கோத்தபய தான் கட்டளையிட்டார் என்று சொல்லியதின் மூலம் மகிந்தாவின் குடும்பம் எமது தமிழ் தேசியத்தின் அடையாளத்தை அழிக்க வெறியோடு களத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இவ்வளவு அநியாயங்கள் ஒவ்வொருநாளும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட பின்னரும், எமது தமிழ் மறவர்கள் கைகளை பின்னால் கட்டி, கண்களை துணியால் கட்டி, பிடரியில் துப்பாக்கியால் சுட்டி கிடத்திய கோரம் ஊடகங்களில் வலம் வந்தபோது, அது பொய்.
திட்டமிட்டு அவர்கள் வடிவமைத்திருக்கிறார்கள் என்று பதறிய மகிந்தாவின் குடும்பம், ஐ.நா.வின் பதிலால் அடங்கிப்போனது. இல்லை இது நிகழ்த்தப்பட்ட உண்மையான படப்பிடிப்புத்தான் என்பதை ஐ.நா. அறிவித்தது. இவர்களுக்கெல்லாம் இந்த நாட்டின் மக்கள் தொகையில் பாதியை குறைத்து கணக்குக்காட்டி, மீதியை கொன்றொழிக்கும் திட்டத்திற்கு இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாபும் துணைபோனார். இதன்மூலம் தமிழின அழிப்பின் கூட்டாளியாக இந்தியா வென்றது என்கின்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒரு இனத்தை அவ்வளவு விரைவில் அழித்துவிட முடியுமா? என்பதுதான் நமது கேள்வி. நமது இனத்திற்கான ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நமது இலக்கியங்களும், இலக்கணங்களும் மூத்து நின்று, முதிர்ச்சிப் பெற்றிருக்கிறது. அடங்க மறுத்தலின் அடையாளங்களாய் எமது வீர மறவர்கள் இலக்கியங்களிலே களம் கண்டிருக்கிறார்கள்.
புறநானூறு இலக்கியம் எமது வீரத்தன்மையை இந்த மண்ணிற்கு விளக்கிக் கூற எழுதப்பட்டிருக்கிறது. கடந்த காலத்தை அவர்கள் புரவி ஏறி கரங்களிலே வாள் தரித்து, சண்டையிட்ட காட்சிகளை நாம் காணவில்லை. ஆனால் நாம் வாழும் காலத்திலே புறநானூற்றின் வீரத்தை பின்னுக்குத் தள்ளி, இந்தியா எனும் மாபெரும் ஆற்றல் வாய்ந்த ராணுவத்தை விரட்டி அடித்த மாபெரும் வீர மறவர்களின் வரலாற்றை நாம் கண்களால் கண்டோம். நமது பகைவன்கூட நம்மைக் கண்டு அஞ்சி நடுங்கியபடி வந்தான். ஆனால் நாம் நேர்மைக் குறித்த சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது கிடையாது. நமது இன உறவுகள் துடிதுடித்து மாண்டபோதுகூட, கொண்ட கொள்கையில் துளிக்கூட சமரசம் செய்து கொள்ளாமல் அறம் காத்து சமராடிய அறத்தின் பாதுகாவலனாக எமது தேசிய ராணுவம் இருந்தது. எமது மக்களை விட மேலானது ஒன்றும் இல்லை என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு அவர் இடம் தரவில்லை. நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் எந்த அளவிற்கு சமர் களத்திலே வீரம் சொறிந்தார்களோ, அதைவிட மேலாக அவர்கள் அறம் சொறிந்து களமாடினார்கள்.
களமாடிய அந்த அறவீரர்களின் வித்துடல்களை எமது மண்ணின் மானத்திற்காக அந்த மண்ணிலே உரமாகிய எமது கார்த்திகை பூக்களை, எமது மானத்தின் அடையாளத்தை காத்து நிற்பதற்காக தம்மையே எரித்துக் கொண்ட அந்த கற்பூர தீபங்களை தாம் புதைக்கப்பட்ட மண்ணிலிருந்து எடுத்தெறிந்து, தமது வக்கிரத்தை வெளிக்காட்டிய மகிந்தாவின் கேவலம், இன்று இல்லாவிட்டாலும் நாளை வரலாற்றில் கருப்பு புள்ளியாய் நிலைத்து நிற்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் தருணம்தான் இந்த மே 17 தினம் என்பதை நாம் மறக்கக்கூடாது. நமது வாழ்வு, நமது தேவை குறித்து நாம் சிந்திக்கும்போது கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்கள், சற்றேறக்குறைய 60 ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருந்த நமது உரிமைக்கான சமர், நமது வாழ்வியலின் உயர்வுக்காக நடத்தப்பட்டது.
கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, கலாச்சார பண்பாட்டு சீரழிவுகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக, நம்மை மதிக்காக சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து நாம் களம் காண்போம். ஆனால் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு, நாம் தமிழீழம் தான் தீர்வு. அதைத்தவிர வேறு பேச்சுக்கே இடம் கிடையாது. இது எமது உரிமைக்கான களமல்ல, எமது உயிர் வாழ்வதற்கான களம் என்பதை எதிரிக்கு எடுத்துரைக்கும் நாளாக இதை நாம் அடையாளப்படுத்தி பார்க்க வேண்டும். எந்த இடர் வந்தாலும் நமது பயணத்தின் தொடர் தடைப்படக் கூடாது. உலக வரலாற்றில் மாபெரும் சாம்ராஜ்ஜியங்களை கட்டி ஆண்ட எத்தனையோ பேர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள். நிகழ்கால வரலாற்றில் அதுதான் சாத்தியமானது. அதுதான் உண்மையும்கூட.
தமது 17வது அகவையில் ரசிய காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞனைப் பார்த்து காவல்துறை அதிகாரி சொன்னான், தம்பி நீ யாரை எதிர்த்து நிற்கிறாய் தெரியுமா? மாபெரும் ஆற்றல் வாய்ந்த ஜார் அரசை இந்த ரசிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியை என்றபோது, அந்த இளைஞன் சொன்னான், இது பார்ப்பதற்குத்தான் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஓங்கி ஒரு குத்துவிட்டால் இந்த கோட்டை சரிந்து விழுந்துவிடும். காரணம் உள்ளே செல்லரித்துப் போயிருக்கிறது என்றான். அவன்தான் ரசிய சாம்ராஜ்ஜியத்தை மக்கள் திரள் போராட்டங்களால் புரட்டிப்போட்ட மாபெரும் போராளி மாவீரன் விளாதிமிர் இலியீச் லெனின். ஆக, மகிந்தாவின் இந்த செல்லரித்துப் போன சாம்ராஜ்ஜியத்தை ஓங்கி குத்துவிடுவதற்காக சபதம் எடுக்க வேண்டிய நாள் தான் இந்த மே 17.
நமக்கான வாழ்வை, நமக்கான வளத்தை, நமது உரிமையை சூறையாடிய போதுகூட நாம் சகித்துக் கொண்டோம். ஆனால், இப்போது நமது வாழும் உரிமையையே சிதைக்க நினைக்கும் இந்த அட்டை சிங்கத்தின் ஆட்டத்தை ஒடுக்குவதற்கான நாளாக இந்த மே 17 இருக்க வேண்டும். இது நிகழுமா? என்ற சந்தேகம் நம் மனதிலே ஒரு துளிக்கூட எழக்கூடாது. காரணம் வரலாற்றில் இப்படி வீழ்ந்த ஆதிக்க வாதிகளின் எண்ணிக்கை ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. ஹிட்லரும், முசோலினியும் மாபெரும் வீரர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மக்கள் ஆற்றலின் முன்னால் அவர்களின் அட்டைக் கத்தி மடங்கிப்போனது. அவர்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் வெறும் கூடுகளாய் வீழ்ந்து நொறுங்கியது. இந்த உலகின் மக்கள் ஆற்றலைவிட மேலானது ஒன்றுமில்லை.
ஆகவே, நாம் உறுதியாக சபதம் எடுக்க வேண்டிய தருணத்திலே இருக்கிறோம். எமது தேசிய தலைவர் அறம் வழிக் கொண்ட நாயகர், அயராத உழைப்பாளி, அளவிட முடியாத பண்பாளர், அள்ளி பருக முடியா அன்புச்சுரங்கம், அவரின் வழி நடத்தலும், அவரி விழி பார்வையும் நம் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஒரு மகிந்தா அல்ல, இந்த மகிந்தாவோடு ஆயிரம் மகிந்தாக்கள் ஒன்றிணைந்தாலும் நமது தேசிய அடையாளத்தை மாற்றி அமைக்க எவராலும் முடியாது. நமது தேசிய அடையாளத்தைக் காக்க, எம் தலைவர் எல்லா காலத்திலும் களம் அமைக்க தயாராகவே இருக்கிறார். நாம் தயார் என்ற எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான நாளாகவே இந்த மே 17ஐ நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். விதைக்கப்பட்ட நமது மாவீரர்களின் திசைகளை நோக்கி நமது கரங்களை உயர்த்தி சபதம் எடுப்போம். எம் தலைவன் கிழக்கு திசையாய் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர் விழிப்பின் அடையாளமாய் நம்மோடு நடந்து கொண்டிருக்கிறார். கண் மலர்ந்தது போதும். கண் விழி. கிழக்கு திசையை நோக்கி நடந்து செல்.
Monday, May 10, 2010
பிரபாகரன் உயிரோடு வாழ்கிறார் ? : சபா நாவலன்
ஒரு ஆண்டு பல நீண்ட ஆண்டுகள் போல சோகத்தையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து இரத்தம் படிந்த ஆண்டாகக் கடந்து போய்விட்டத்து. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராஜபக்ச குடும்ப அரசு சில நாட்களுக்குள் கொன்று போட்டுவிட்டு உலகமக்களை நோக்கி நாம் தான் கொன்று போட்டோம் என நெஞ்சை நிமிர்த்தி திமிரோடு சொன்ன நாட்களின் பின்னர் ஒரு ஆண்டு ஒவ்வொரு நாளும் கணங்களாகக் கடந்து போய்விட்டது. ஒபாமா தேசத்தின் சற்றலைட்கள் பார்த்துக்கொண்டிருக்க, கருணாநிதியின் கொல்லைப் புறத்தில் தமிழர்கள் குடியிருப்புக்கள் மீது அதிபாரக் குண்டுகளும் இரசாயனக் குண்டுகளும் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்து போய்விட்டது. முதியவர்களின் ஈனக் குரல்கள், குழந்தைகளின் அவலக் குரல்கள், அப்பாவிகளின் கூக்குரல்கள் எல்லாம் மரணத்துள் முற்றாக அமிழ்த்தப்பட்ட நாள் மே 18ம் திகதி.
மனிதப் பிணங்களின் மேல் நடந்துவந்த எஞ்சிய அப்பாவித் தமிழர்களை சிறைப் பிடித்து வைத்திருந்தது ராஜபக்ச குடும்ப அரசு. குண்டு வீசி, இரசாயனத் திராவகங்களால் எரித்துக் கொன்று போட்டவர்கள் போக முகாம்களிலிருந்து சந்தேகத்தின் பேரில் அரச துணைக் குழுக்களின் துணையோடு கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்கள் பல ஆயிரங்கள். 40 ஆயிரம் பேர் ஊனமுற்றவர்கள் என ஐ.நா அறிக்கை கூறுகிறது. ஒரு ஊனமுற்ற சமுதாயத்தை உருவாக்கி உலாவவிட்டிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்திருப்பது ஒரு மாபெரும் வல்லரசல்ல. அமரிக்காவில் கூலிக்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கோதாபாய ராஜபக்சவின் தலைமையில் இலங்கை என்ற குட்டித்தீவு தான் இதையெல்லாம் நடத்தி முடித்திருக்கிறது.
மனிதர்கள் சாரி சாரியாக கொல்லப்பட்ட போது உலகம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கடந்த ஆண்டு, மே பதின்நான்கில்,இந்தியா,ஜப்பான்,சீனா,துருக்கி,வியட்னாம்,லிபியா,ஈரான் போன்ற நாடுகள் மனிதப் படுகொலைகள் குறித்து ஐ.நாவில் பேசுவதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் சபை எதிர்ப்புகளோடு நிறைவுறுகிறது. மக்கள் கேடயமாகப் பயன்படுத்துவதை பாதுகாப்புச் சபை கண்டித்துவிட்டு மௌனமாகிறது. பதினைந்தாம் திகதி கற்பனை செய்து பார்க்கமுடியாத மனிதப் பேரவலம் நடக்கவிருப்பதாகச் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கிறது.
தமிழர்களைக் காப்பாறுவேன் என கருணாநிதி,ஜெயலலிதா , நெடுமாறன், வை.கோபாலசாமி, திருமாவளவன் போன்றோர் வேறுபட்ட தளங்களில், வேறுபட்ட வடிவங்களில் தமது நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். மே 16 இல் வன்னிப் பாதுகாப்பு வலையம் முற்றாகச் சுற்றி வளைக்கப்படுகிறது. அதே நாளில் தமிழகத்தில் கருணாநிதியும், இந்தியாவில் காங்கிரசும் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.
வன்னியிலிருந்து இருபத்தையாயிரம் மக்களைக் காப்பாற்ற சர்வதேசத்திடம் கோரியும் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என சோகமாய் கூறும் விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குரலின் ஒலிவடிவம் தமிழ் இணையங்கள் எங்கும் ஒலிக்கிறது. குமரன் பத்மநாதன் ஊடாகவே இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.
மே 17 இல் துப்பாக்கிப் பயன்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக புலிகள் அறிவிக்கின்றனர். ரஷ்யா மேலதிக இராணுவத்தளபாடங்களை இலங்கைக்கு வழங்குகிறது. பௌத்த கொடியுடனும்,இலங்கை தேசியக் கொடியுடனும் ஜோர்தானிலிருந்து இலங்கை விமான நிலையத்தில் ராஜபக்ச வந்திறங்குகிறார்.
மே 18 அதிகாலை மக்களையும் தம்மையும் பாதுகாக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் மரண ஓலம் கேட்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மே 18ம் திகதி மாலை இறுதிக் கட்டப் போரில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அரசின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவிக்கிறார். தமிழ் நாட்டிலோ புலம் பெயர் நாடுகளிலோ வாழ்ந்த தமிழர்கள் இந்தச் செய்தி பொய்யாக இருக்கக் கூடாதோ எனப் “பிரார்த்திக்கின்றனர்”. கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கின்றார் என பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்குகிறார்.
பிரபாகரன் கொல்லப்பட்டது தொடர்பான குழப்பமான கருத்துகளை இலங்கை அரசு அவ்வப்போது வெளியிடுகிறது. பிரபாகரன் நலமோடிருக்கிறார் என்கிறார் பழ.நெடுமாறன். புலி ஆதரவுத் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அனைவரும் பிரபாகரன் வாழ்வதாக ஒரே குரலில் ஒலிக்கின்றனர்.
பிரபாகரன் இருக்கின்றாரா இல்லலையா என்பதற்கு அப்பால் முப்பதாண்டுகள் இழப்பும், தியாகங்களும், அர்ப்பணங்களும்,இரத்தமும்,வியர்வையும், எரிந்து கொண்டிருந்த உணர்வுகளும் கூட புலிகளிடமிருந்து சிறீலங்கா பேரினவாத அரசின் கரங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதான உணர்வுதான் தமிழ்ப் பேசும் மக்களைத் தைத்தது. சிறை முகாம்களில் வதைக்கப்படுவதற்காக வரவழைக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களில் கூக்குரல்கள் மனிதாபிமானிகளின் உணர்வுகளை எரித்துக்கொண்டிருந்தது.
புலிகள் நம்பியிருந்த அனைத்து சந்தர்ப்பவாதிகளும் பிரபாகரன் இருக்கிறார் என அடம்பிடித்துக்கொண்டிருந்தனர். பிரபாகரன் இறந்தால் இரத்த தமிழ் நாட்டில் ஆறு ஓடும் என்றவர் வை.கோபாலசாமி. அவருக்கு இரத்த ஆற்றை ஓட்டிக்காட்ட வேண்டிய தேவை அற்றுப் போயிருந்தது; ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை பிரபாகரன் உயிரோடு வாழ்வதாகவே பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். முத்துக்குமார் இறப்பு எழுச்சியாக மாறிவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொண்ட வை.கோ பிரபாகரன் இறந்துபோகாமல் இருப்பதிலும் அவதானமாக இருந்தார்.
ஆக,”பிரபாகரன் வாழ்கிறார்” என்பது பலருக்கு அதிலும் ஈழப் போராட்டம் மறுபடி ஒரு எழுச்சியாக உருவாகக் கூடாது என்று எண்ணியவர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமைந்திருந்தது.
தமிழ்ப் பேசும் மக்களின் பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தை முற்றாக நிர்மூலமாக்க “பிரபாகரன் வாழ்கிறார்” என்ற சுலோகம் இலங்கை இந்திய அரசுகளுக்கு பல வகையில் பயன்பட்டது.
1. தமிழ் நாட்டில் உருவாகக் கூடிய எழுச்சியை பிரபாகரன் வாழ்தல் தொடர்பான நம்பிகையை வழங்கி நிர்மூலமாக்கல்.
2. புலிகளில் எஞ்சியிருக்கக் கூடிய போராளிகளை பிரபாகரனின் வருகைக்காக் காத்திருக்கச் செய்தலூடாக பலவீனமாக்குதல்.
3. புலம் பெயர் நாடுகளில் எழக் கூடிய எதிர்ப்புப் போராட்டங்களைப் பிரபாகரன் இருப்பைக் முன்வைத்துப் பலவீனமாக்குதல்.
4. இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையைப் பிரபாகரன் வாழ்தல் குறித்த விவாதங்களூடாகத் திசை திருப்புதல்.
இந்த எல்லா நோக்கங்களுமே இலங்கை இந்திய ஆளும்வர்க்கங்களுக்கும் அவற்றின் தொங்கு தசைகளுக்கும் தற்காலிக வெற்றியைப் பெற்றுக்கொடுத்தன.
உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ்ப் பேசும்மக்கள் மத்தியில் ஒரு புரட்சிக்காரனாக என்பதற்கு அப்பால் சூரியத் தேவனாகவும் கடவுளாகவும் கூடக் கருதப்பட்ட பிரபாகரனின் உயிர் பறிக்கப்பட்டால் தமிழர்கள் வாழ் நிலங்களில் நெருப்பெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வை.கோபாலசாமி, திருமாவளவன் போன்ற அரசியல் வியாபாரிகள் பிரபாகரன் வாழந்போது பல தடவைகள் இது குறித்துக் கூறியிருந்தார்கள்.
மே 18ம் திகத்திக்கு முன்னர் பிரபாகரனது படங்களைத் தாங்கியபடி ஐரோப்பியத் தெருக்களில் தமிழ் இளைஞர்கள் கொட்டும் மழையில் நடத்திய எதிர்ப்பு உர்வலங்கள், உண்ணாநிலைப் போராட்டங்கள் பிரபாகரன் மே 18 இன் பின்னர் நின்று போய்விட்டன.பிரபாகரன் பதாகைகளோடு இரண்டு இலட்டசம் தமிழர்கள் ஐரோப்பியத் தெருக்களில் நடத்திய போராட்டங்கள் நிறுத்தப்பட்டு பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட பின்னர் இருபது பேர் கூட அஞ்சலி செலுத்தக் காணப்படவில்லை.
முத்துக்குமார் தனது உயிரை மாய்த்துக்கொண்ட போது பத்தாயிரம் தமிழர்கள் உணர்ச்சிகரமாய் நடத்திய போராட்டங்கள் எல்லாம் வலுவிழந்து பிரபாகரன் அழிந்து போனபோது மயான அமைதியாகக் காணப்பட்டன. போராடங்களை ஐரோப்பாவில் ஒழுங்கு செய்தவர்கள் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கின்றார் என்றனர். வை.கோ, திருமாவளவன்,நெடுமாறன் என்று அனைத்து அரசியல் வியாபாரிகளும் ஒரே பல்லவியத் தான் பாடினார்கள். இலங்கை இந்திய அரசுகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன. எதிர்பார்க்கப் பட்ட வன்முறைகளும் போராட்டங்களும் பிரபாகரன் வருவார் என்று கூறி மிகவும் தந்திரமாக நிறுத்தப்பட இலங்கை அரசு எதிர்ப்புகளின்றி மூன்றுலட்சம் தமிழர்களைச் சிறைப்பிடித்து, தனது இனவழிப்பைத் தொடர்ந்தது.
இன்னொரு புறத்தில் புலிகளின் பிஸ்டல் குழுவும், தற்கொலைப் படைப்பிரிவின் ஒரு பகுதியும் வன்னியிலிருந்து வெளியேறியிருந்ததாக இனவழிப்பு நடந்து கொண்டிருந்த வேளைகளில் கோதாபாயவும் உதய நாணயக்காரவும் பல தடவைகள் கூறியிருந்தனர்.கிழக்கின் காடுகளில் கூட ஒரு குறித்த தொகைப் புலிகள் நிலை கொண்டிருந்தனர். இவர்கள் பிரபாகரனை எதிர்பார்த்துக் காத்திருந்தானர். இந்த இடைவெளியில் இலங்கை அரசு இவர்களின் வலைப்பின்ன்லை சித்தைத்து, பலரை உள்வாங்கியும் அழித்தும் எதிர்ப்பை நிர்மூலமாக்கிவிட்டது.
அழிவிற்கான காரணங்கள், புதிய உலக நிலை, போராட்டத்தின் தவறுகள் என்று பல வாதப் பிரதிவாதங்களூடான புதிய சக்திகளை உருவாக்கத்தை பிரபாகரன் விவாதங்களூடாகத் தடைசெய்து ஈழ மக்கள் மத்தியில் போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்தது. இனப்படுகொலையின் இரத்த வாடை வீசிக்கொண்டிருந்த அதேவேளை பிரபாகனையே பயன்படுத்தி அதனை நிகழ்த்தியவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர்.
தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முனைந்த ஆயிரமாயிரம் அப்பாவிப் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பிரபாகரனின் இருப்பு விருப்புடையதாய் அமைய அதே விடயத்தை ஆளும்வர்க்கங்கள் தமது நலனுக்காகத் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டன.
புலம் பெயர் நாடுகளிலும் இந்தியாவிலும் புலிகளின் பரந்துபட்ட வியாபார மூலதனத்தின் பினாமிகளாகச் செயற்பட்ட பலருக்கும் இந்த இருப்புக்குறித்த பிரச்சாரம் வாய்ப்பானதாக அமைய இன்றுவரைக்கும் பிரபாகரனை அனாதைப் பிணமாய் நடுத்தெருவில் வீசியெறிந்துவிட்டனர். நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டத் தீர்மானம் என மக்களின் உணர்வுகளை வியாபாரமாக்கக் கற்றுக்கொண்ட புதியவர்கள் பிரபாகரனை அனாதையாகவே நந்திக்கடலோரத்தில் விட்டுவிடுவார்கள்.
தமது வாழ்நாளில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தவோ, விமர்சிக்கவோ இவர்கள் முன்வரமாட்டார்கள். பிரபாகரன் இறந்து போன பின்னர்கூட உலகம் இனப்படுகொலை நிகழ்த்தியவர்களுக்கு எதிராகக் கொந்தளிக்காமல் தடுதவர்கள் இவர்கள்.
உலகம் முழுவது பரந்திருக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் ஒன்று மட்டும் நிதானமாய் வாழ்கிறது. நாங்கள் இப்போது சிறுபான்மையல்ல பெரும்பான்மை என்ற உணர்வு. உலகின் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் ஒரு பகுதி நாங்கள். சிறுபான்மை ஒடுக்கும் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான பலம் மிக்க பெரும்பான்மை. நாற்பத்தி இரண்டு வீதமான உலக மக்கள் வறுமைக்கோட்டுற்குக் கீழ் வாழ்கிறார்கள். தமது இந்த நிலைக்குக் காரணமானவர்களை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மையோடு இணைந்து கொள்ளவும் அவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் புதிய போராட்டத்தை உலகிற்கு உதாரணமாக நிகழ்த்தவும் எமக்கு முப்பது வருட போராட்ட அனுபவம் உண்டு. கொலைகள்,சித்திவதைகள்,காட்டிக்கொடுப்புக்கள், துரோகங்கள் என்று அனைத்தையும் கடந்துவந்தவர்கள் நாங்கள். இப்போது அமரிக்கா யார்பக்கம், ஐரோப்பா எங்கே, ஐ.னா வின் துரோகம்,இந்தியாவின் கொலைகார முகம் என்று அனைத்தையும் அனுபங்களூடாகவே அறிந்துகொண்டவர்கள். இவை அனைத்துக்கும் எதிரான பெரும்பாமையோடு எம்மை இணைத்துக்கொள்வதிலிருந்தே போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நகரமுடியும்
Subscribe to:
Posts (Atom)